tamilnadu

img

2020 பட்ஜெட்டில் புதிய ரயில்கள், திட்டங்கள் அறிவிக்கப்படுமா?

விருதுநகர், ஜன.27- தெற்கு இரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், தென் மாவட்ட ரயில் நிலையங்களை ஆய்வு செய்த போது, ரயில் பயணிகள், வியாபாரத் தொழில்துறை சங்கத்தினர் அளித்த கோரிக்கைகள் பட்ஜெட்டில் வெளியாகுமா என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கடந்தாண்டு இராமேஸ்வரம், மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி, செங்கோட்டை ஆகிய ரயில்வே வழித்தடங்களை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு செய்தார். அப்போது, ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள், ஊழியர்கள் குடியிருப்புகள், ரயில் பாதைகள், சிக்னல்கள், பாலத்தின் தன்மை, புதிய ரயில்வே பாதை பணிகளை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை ஆய்வு செய்தார். தென் மாவட்டங்களிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், செங்கோட்டை ரயில் நிலையங்களிலிருந்து சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர், பெங்களூரு, மங்களூர், திருப்பதி, வேளாங்கண்ணி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, இராமேஸ்வரம், திருவண்ணமாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர போதுமான பயணிகள் ரயில் இல்லை. இந்த ஊர்களுக்கு எளிதில், விரைவாகச் செல்ல புதிய ரயில்கள் இயக்க வேண்டுமென பொது மேலாளரிடம் ரயில் பயணிகள், வியாபார பிரமுகர்கள் கோரிக்கை மனு அளித்தனர். மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை, பந்தல்குடி, விளாத்திகுளம் வழியாக தூத்துக்குடி வரை சரக்கு ரயில் பாதை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. அதற்கு இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். 

இரட்டை ரயில் பாதை 

மதுரை-நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் 2021-ஆம் ஆண்டு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019- ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்தப் பணிக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டதால் இரட்டை ரயில் பாதை பணி மந்த கதியில் நடைபெற்று வருகிறது.  குறிப்பாக விருதுநகர் - மதுரை இடையே அதிக ரயில்கள் சென்று வருகின்றன. இதனால், கிராசிங்கில் ரயில்கள் பல மணி நேரம் சிக்கிக் கொள்கின்றன. பயணிகள் உரிய நேரத்தில் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை தொடர்கிறது. மதுரை-விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதையில் போக்குவரத்தை தொடங்கினால் பயண நேரம் வெகுவாகக் குறையும். 2020-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கூடுதல் நிதி வழங்கி இப் பணியை முடிக்க வேண்டும். 

கும்பகோணம்-மயிலாடுதுறை-விழுப்புரம் இரட்டை ரயில் பாதை பணிகளை விரைவு படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட திருவண்ணமாலை-நகரி, மொரப்பூர்-தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.  அறிவிக்கப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 2007- ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கோயம்புத்தூர்-செங்கோட்டை இடையே இரவு நேர பயணிகள் ரயில் ஆகியவற்றை உடனடியாக இயக்க வேண்டும்.  வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ், தாம்பரம்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்களை தினசரியும் இயக்க வேண்டும்.  ரயில் நிலையங்கள் மேம்பாடு, பயணிகள் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு வசதி, குடிநீர், கழிப்பிடம், நகரும் படிக்கட்டுகள், ரயில் நிலையங்களில் சுரங்கப்பாதை அமைத்தல் போன்ற பணிகளையும் விரைந்து செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நமது சிறப்பு நிருபர்
 

;